பழைய கட்டிடங்களுக்குள் செல்லும் போது சிலருக்கு ஏற்படும் விளக்கமற்ற பயம், பதற்றம் மற்றும் அசௌகரிய உணர்வுகளுக்கு “இன்ஃப்ராசவுண்ட்” (Infrasound) எனப்படும் மிகக் குறைந்த அதிர்வெண் ஒலிகள் காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மனிதக் காதுகளால் நேரடியாகக் கேட்க முடியாத 20 ஹெர்ட்ஸுக்கு குறைவான இந்த ஒலிகள், பழைய கட்டிடங்களில் காணப்படும் துருப்பிடித்த குழாய்கள், காற்றோட்ட அமைப்புகள் மற்றும் இயந்திரங்களால் உருவாகக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த ஒலிகள் உடலில் மனஅழுத்த ஹார்மோனான கார்டிசோல் சுரப்பை அதிகரித்து, எரிச்சல், சோகம், பதற்றம் மற்றும் பயம் போன்ற உணர்வுகளை தூண்டக்கூடும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கனடாவின் MacEwan University பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் Rodney Schmaltz மற்றும் அவரது குழு மேற்கொண்ட ஆய்வில், 18 ஹெர்ட்ஸ் இன்ஃப்ராசவுண்ட் ஒலிக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகமான மனஅழுத்த அறிகுறிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் இத்தகைய குறைந்த அதிர்வெண் ஒலிகளுக்கு இயற்கையாகவே எச்சரிக்கை உணர்வுடன் பதிலளிக்கும் வகையில் உருவாகியிருக்கலாம் என்றும், இது உடலின் பழமையான பாதுகாப்பு அமைப்பாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆய்வு, பழைய கட்டிடங்களில் “பேய் இருப்பது போல” உணரப்படுவதற்கான அறிவியல் விளக்கமாக பார்க்கப்படுவதுடன், எதிர்கால கட்டிட வடிவமைப்பு மற்றும் இரைச்சல் கட்டுப்பாட்டு விதிமுறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.