Reading Time: < 1 minute

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் நாடுகடத்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம், அறிவித்துள்ளது.

Tamil Business Directory

இந்த தற்காலிக நடவடிக்கை நிர்வாக சிக்கல் நடைமுறையின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இயற்கை பேரழிவுகள் அல்லது வன்முறை காரணமாக பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளுக்கு இந்த நடைமுறை பொதுவாகப் பயன்படுத்தப்படுவது வழமையானது.

எனினும், குற்றச்செயல்கள், சர்வதேச அல்லது மனித உரிமை மீறல்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான காரணங்களால் கனடாவுக்கு அனுமதிக்கப்படாதவர்களுக்கு இந்த தற்காலிக தடை பொருந்தாது எனவும் கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஈரான் மீது ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் மேற்கொண்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.

அதேசமயம் ஹிஸ்புல்லாஹ் அமைப்புடன் இஸ்ரேல் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகளுக்கு அருகில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

நிலமை சீராகிய பின்னர் லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு நாடுகடத்தல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் கனடாவில் அனுமதிக்கப்படாத 22,500 க்கும் அதிகமான நபர்கள் நாடுகடத்தப்பட்டதாகவும், தற்போது வாரத்திற்கு சுமார் 400 பேரை நாடுகடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.