Reading Time: < 1 minute

தனது நாய்களைப் பார்வையிடச் சென்ற பெண் ஒருவர் கரடி தாக்கிப் பலியான சம்பவம் ஒன்ராறியோவின் மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

அமெரிக்காவின் எல்லையுடன் அமைந்துள்ள Red Pine Island பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர், நாய்களைப் பார்வையிடச் சென்ற தமது மகள் வீடு திரும்பாததை அடுத்து அவரது பெற்றோர் தமக்கு முறைப்பாடு வழங்கியதாகவும், தாம் சம்பவ இடத்திற்கு சென்று தேடிய போது குறித்த அந்தப் பெண் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்த நாய்களில் ஒன்றும் காயங்களுடன் காணப்பட்டதாகவும், இந்த தேடுதலின் போது காவல்துறையினரும் மூன்று கரடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவற்றுள் ஒன்று காவல்துறையினர் மீதும் மூர்க்கத்தனத்தைக் காட்டியதால் அது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இயற்கை வளங்கள் மற்றும் வனவளத்துறை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.