கனேடிய தயாரிப்புகள் என மக்களை நம்பவைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், Real Canadian Superstore நிறுவனத்திற்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதாக கூறியதுடன், கனடாவுக்கு கூடுதல் வரிகள் விதித்தது பல கனேடியர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணித்து, உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிப்பதன் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனோபாவம் அதிகரித்துள்ளது.
ஆனால், உள்நாட்டு தயாரிப்புகள் என மக்கள் கருதிய சில பொருட்கள் உண்மையில் அமெரிக்க தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.
உதாரணமாக:
- Betty Crocker Chocolate Chip Cookie Mix – “Canada’s #1 Selling Baking Mix Brand” என முன்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Habitant Pea Soup – டின் மீது “Designed in Canada” என குறிப்பிடப்பட்டுள்ளது.
- McCain Super Spirals French Fries – Maple இலை லோகோவும் “Proud Canadian Company” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இந்த தயாரிப்புகளின் பின்புறத்தில் “Product of USA” என குறிப்பிடப்பட்டிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்புறத்தில் கனேடிய அடையாளங்களை முன்னிறுத்தி, பின்னால் அமெரிக்க தயாரிப்பு என குறிப்பிடுவது ஏமாற்றமாக உள்ளதாக பலர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், கனேடிய தயாரிப்பு என தவறாக விளம்பரம் செய்ததாகக் கூறி, கனடா உணவு கண்காணிப்பு ஏஜன்சி Canadian Food Inspection Agency, Real Canadian Superstore நிறுவனத்திற்கு $10,000 அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
சில தயாரிப்புகளில் “கனேடிய தயாரிப்பு” என்ற புரிதலை ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும், அவை உண்மையில் கனடாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், “Made in Canada” மற்றும் “Product of Canada” போன்ற குறிப்புகள் குறித்து நுகர்வோர் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.