Reading Time: < 1 minute

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில், சமீபத்தில் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது செய்தார்கள்.

Tamil Business Directory

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் திகதி, மனித்தோபா மாகாணத்திலுள்ள Altona என்னுமிடத்தில் சிக்னலில் நிற்காமல் சென்ற ட்ரக் ஒன்று கார் ஒன்றின் மீது மோதியது.

அந்த விபத்தில், காரில் பயணித்த சாரா (Sara Unger, 35) என்னும் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த அவரது மகளான அலெக்சா (Alexa, 8) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

விபத்தை ஏற்படுத்திய ட்ரக்கை இயக்கிய நவ்ஜீத் சிங் (Navjeet Singh, 25) என்னும் இளைஞரும் காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், மாயமாகிவிட்டார்.

அவரைக் கைது செய்ய கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகத்து மாதம், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில், ரொரன்றோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய சிங்கை தயாராக காத்திருந்த பொலிசார் கைது செய்தார்கள். இந்நிலையில், சிங்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சிங் தனது பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைக்கவேண்டும், எந்த வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையிலும் அமரக்கூடாது ஒன்ராறியோவில் ஒரு குறிப்பிட்ட முகவரியில் தங்கியிருக்கவேண்டும், வாரத்துக்கு ஒருமுறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளின்பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஒரு சர்வதேச மாணவராக இந்தியாவிலிருந்து கனடா வந்த சிங், 2022ஆம் ஆண்டு பணி அனுமதி பெற்று ட்ரக் சாரதியாக பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.