Reading Time: < 1 minute

கனடாவின் மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி முனைக் கொள்ளை சம்பவம் தொடர்பில் ரொறன்ரோவைச் சேர்ந்த ஒருவரைப் பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

ஹுரோன்டாரியோ வீதி (Hurontario Street) மற்றும் டெர்ரி வீதி (Derry Road) சந்திப்புக்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று சந்தேகநபர்கள் துப்பாக்கி முனையில் ஒருவரை அச்சுறுத்தி கொள்ளையிட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கைகளின் போது ஹோட்டலில் இருந்து துப்பாக்கி ஒன்றைப் பொலிஸார் மீட்டனர்.

ரொறன்ரோவைச் சேர்ந்த அப்துல்காதிர் அப்தி (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது கொள்ளை, சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மிசிசாகாவைச் சேர்ந்த கிம்பர்லி மெக்கின்டைர் (28) என்ற பெண்ணுக்கு எதிராகப் பொலிஸார் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சுமார் 5 அடி 5 அங்குல உயரம் கொண்ட இவர், கடைசியாகப் பழுப்பு நிற ரோமங்களைக் கொண்ட கருப்பு நிறக் கோட் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மூக்கின் இடது பக்கத்தில் ஒரு மச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்றாவது சந்தேகநபரான 20 முதல் 25 வயதுடைய ஒரு இளைஞனைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இவர் மெலிந்த உடல்வாகு கொண்டவர் எனவும், சம்பவத்தின் போது கருப்பு நிற முகமூடி அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் பீல் பிராந்திய பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.