Reading Time: < 1 minute

கனடா முழுவதும் உள்ள கொஸ்ட்கோ விற்பனை நிலையங்களில் விற்கப்பட்ட குழந்தை பால் மாவு தயாரிப்புகள் அவசரமாக மீளப்பெறப்பட்டுள்ளன.

Tamil Business Directory

கென்டாமில் என்ற பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்தின் இரண்டு தொகுதி குழந்தை பால் மாவுகளில் “செரியூலைடு” (cereulide) எனப்படும் நச்சு பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கனடிய உணவு ஆய்வு நிறுவனம் Canadian Food Inspection Agency (CFIA) இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த நச்சு, பாசிலுஸ் சிரியுஸ் என்ற பாக்டீரியாவின் சில வகைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது உட்கொள்ளப்பட்டால் 30 நிமிடங்களுக்குள் வயிற்று வலி, வாந்தி உணர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற குடலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், “செரியூலைடு” அதிக வெப்பத்தையும் தாங்கக்கூடியது என்பதால், பால் மாவை சூடாக்கினாலும் இந்த நச்சு அழிக்கப்பட வாய்ப்பில்லை.

குறிப்பாக இளம் குழந்தைகளில் இது நீர்ச்சத்து இழப்பு போன்ற கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மீளப்பெறப்பட்ட தயாரிப்புகளை உட்கொள்ள வேண்டாம், வழங்க வேண்டாம், பயன்படுத்த வேண்டாம், விற்க வேண்டாம் அல்லது விநியோகிக்க வேண்டாம். அவற்றை குப்பையில் போடவும் அல்லது வாங்கிய இடத்திற்குத் திருப்பி ஒப்படைக்கவும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பால் மாவை குழந்தை உட்கொண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.