Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மாகாணத்தில், ஜனவரி 1 முதல் புதிய கார்பன் மோனாக்சைடு (CO) பாதுகாப்பு விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன. இந்த புதிய சட்ட மாற்றங்களின்படி, பல வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வீடுகளில் கூடுதல் கார்பன் மோனாக்சைடு எச்சரிக்கை கருவிகளை நிறுவ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Tamil Business Directory

புதிய விதிகளின்படி, உலைகள், நீர் சூடாக்கிகள், எரிவாயு அடுப்புகள் அல்லது நெருப்பிடங்கள் போன்ற எரிபொருளில் இயங்கும் உபகரணங்கள் உள்ள அனைத்து வீடுகளிலும்,

  • ஒவ்வொரு தளத்திலும்,
  • அனைத்து உறங்கும் அறைகளின் வெளிப்புறப் பகுதிகளிலும்
    கார்பன் மோனாக்சைடு எச்சரிக்கை கருவிகள் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு CO எச்சரிக்கை கருவி உள்ள வீடுகள்கூட, புதிய பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்ய மேலதிக கருவிகளை நிறுவ வேண்டியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாகாணத்தில் கார்பன் மோனாக்சைடு தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கான பதிலாகவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக, பிரதி தீயணைப்பு அதிகாரி ஜோன் மெக்பெத் தெரிவித்தார்.
“கார்பன் மோனாக்சைடு என்பது மணமோ, சுவையோ, நிறமோ இல்லாத ஒரு ஆபத்தான வாயு. ஒன்ராறியோ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகின்றன,” என அவர் கூறினார்.

தீயணைப்புத் துறை அலுவலகத்தின் அறிக்கையின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான கார்பன் மோனாக்சைடு சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வீடுகளுக்குள்ளேயே நிகழ்கின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் இந்த அபாயம் அதிகரிக்கும் என பாரி தீயணைப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக காற்றோட்டம் பாதிக்கப்படுவதும், நெருப்பிடங்கள் மற்றும் வெப்ப உபகரணங்களின் பயன்பாடு அதிகரிப்பதும் இந்த ஆபத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கார்பன் மோனாக்சைடு மனித உணர்வுகளால் கண்டறிய முடியாததால், அபாயகரமான அளவுகளை முன்கூட்டியே அறிய CO எச்சரிக்கை கருவிகள் மட்டுமே நம்பகமான பாதுகாப்பு வழியாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.