கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஓபினிக் (Opinicon) ஏரியில் சுமார் 150க்கும் மேற்பட்ட North Map Turtle இனத்தைச் சேர்ந்த ஆமைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த ஆமைகளின் ஓடுகள் உடைந்தும், சில உடல்கள் துண்டுகளாகவும் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை முதன்முதலில் கண்டறிந்து உறுதிப்படுத்தியவர் கால்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் கிரிகோரி புல்டே ஆவார்.
ஆய்வாளர்களின் ஆரம்பக் கணிப்புகளின்படி, குளிர்காலத்தில் பனிக்கட்டிகளின் கீழ் குழுக்களாக தங்கியிருந்த ஆமைகளை ஆற்று நீர்நாய்கள் (River Otters) வேட்டையாடியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏரிகளில் உருவாகும் பனிப்படலம் மெல்லியதாக மாறியுள்ளதால், நீர்நாய்கள் போன்ற வேட்டையாடும் உயிரினங்கள் ஆமைகளின் வாழ்விடங்களுக்கு எளிதில் அணுக முடிந்துள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஒரே சம்பவத்திலேயே ஏரியில் வாழும் மொத்த ஆமை தொகையின் சுமார் 10 சதவீதம் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. ⚠️
இதேவேளை, படகுகள் மோதுதல், இனப்பெருக்க இடங்கள் அழிவு, நீர்நிலைகளை ஒட்டிய கட்டுமானங்கள் போன்ற மனிதச் செயல்பாடுகளாலும் இந்த இன ஆமைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இவை “சிறப்பு அக்கறை” தேவைப்படும் இனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆமைகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைய பல ஆண்டுகள் எடுப்பதால், இவ்வாறான திடீர் மற்றும் பெரிய அளவிலான உயிரிழப்புகள் நீண்ட காலத்தில் முழு இனத்திற்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.