கனடாவின் ஒட்டாவா நகரின் Sandy Hill பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் 6வது மாடி ஜன்னல் வழியாக தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் எலியா பிரானி (Eliyah Pirani) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இயற்கையையும் விலங்குகளையும் மிகவும் நேசித்த அன்பான குழந்தை என அவரது பெற்றோர் கண்ணீருடன் நினைவுகூர்ந்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அதிக வெப்பம் நிலவியதால் வீட்டின் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சிறுவன் தவறுதலாக ஜன்னல் வழியாக கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவன் விழுந்ததை கண்டு அவரது தாய் சஜேதே தாஹேரி (Sajedeh Taheri) அலறியபடி, மற்றொரு குழந்தையுடன் உடனடியாக கீழே ஓடி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பை நிர்வகிக்கும் Homestead நிறுவனம், ஜன்னல்களில் பாதுகாப்பு தடைகள் (window restrictors) கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவற்றை அகற்றக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், சம்பவம் நடந்த சிறுவனின் அறை ஜன்னலில் அத்தகைய பாதுகாப்பு வசதி இல்லை என அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நாங்கள் பொறுப்பற்ற பெற்றோர் அல்ல. எங்கள் குழந்தைகளை மிகுந்த அக்கறையுடன் வளர்த்தோம்,” என்று சிறுவனின் தந்தை முகமது பிரானி (Mohammad Pirani) உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒட்டாவா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, குறித்த குடியிருப்பில் உள்ள அனைத்து ஜன்னல்களும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.