கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறிய தொடர் வாகனத் திருட்டுகள் மற்றும் வீடுபுகுந்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெறும் சில மணிநேர இடைவெளியில் நகரம் முழுவதும் நிகழ்ந்த இந்த வன்முறைச் சம்பவங்களின் விபரங்கள வெளியிடப்பட்டுள்ளன.
வெஸ்ட் ஹண்ட் கிளப் வீதி பகுதியில், வாகன சாரதி ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய சந்தேகநபர்கள் இருவர், அவரிடமிருந்து காரைப் பறித்துச் சென்றனர்.
சிறிது நேரத்தில் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், உரிமையாளரின் கார் சாவியைத் திருடி, அங்கிருந்த மற்றொரு காரையும் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட காருடன் நகரின் கிழக்குப் பகுதியில் அவர்கள் விபத்துக்குள்ளாகினர்.
அப்போது விபத்தைப் பார்த்து உதவ முன்வந்த ஒருவரின் காரையும் அவர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
மீண்டும் நகரின் மேற்குப் பகுதிக்குத் திரும்பிய அந்த ஜோடி, மற்றுமொரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.
அங்கு உரிமையாளருடன் ஏற்பட்ட மோதலில், உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளானார். இறுதியாகச் சென்ற வீட்டில் அந்தப் பெண் பிடிபட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோடிய ஆணையும் பொலிஸார் சிறிது நேரத்தில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டாவா பொலிஸ் கொள்ளை தடுப்புப் பிரிவு (Robbery Unit) முன்னெடுத்து வருகிறது. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.