வெனிசுவேலாவில் ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வாழ்ந்து வரும் வெனிசுவேலா குடிமக்கள் அமைதிப் பேரணியை நடத்தினர்.
அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரெஸ் ஆகியோரை கைது செய்ததைத் தொடர்ந்து, இந்த பேரணி நடைபெறியது. கைது செய்யப்பட்ட இருவரும் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, வெனிசுவேலாவில் பல விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒட்டாவா–கேட்டினோ வெனிசுவேலா டயாஸ்போரா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், அரசியல் அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் அமைதியான முறையில் ஜனநாயக மாற்றம் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஒட்டாவாவின் எல்கின் தெருவில் அமைந்துள்ள மனித உரிமைகள் நினைவுச் சின்னம் அருகே நடைபெற்ற இந்த பேரணியில், வெனிசுவேலா கொடிகளை ஏந்திய பலர் பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
“United for Venezuela” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம், வெனிசுவேலாவின் தற்போதைய அரசியல் மற்றும் மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் திருப்பப்பட வேண்டும் எனப் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.




