ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த நீல் என்ற முதியவர், தனது மகனின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கிப் பேசிய மோசடிக் கும்பலிடம் சிக்கி, சுமார் 6,000 டொலர்களை இழந்துள்ளார்.
‘அவசரகால மோசடி’ என அழைக்கப்படும் இந்தப் புதிய வகை மோசடி தொடர்பாக, நீல் தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஜூன் மாத தொடக்கத்தில் புதன்கிழமை ஒன்றில், நீலின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபரின் குரல், நீலின் மகன் பிரையனின் குரலைப் போலவே இருந்துள்ளது.
“தொலைபேசியில் பேசியவர், ‘நான் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா?’ என்று கேட்டார். நான், ‘ஆம், பிரையன் தானே?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆமாம்’ என்றார். அது அப்படியே என் மகனின் குரலாக இருந்ததால், நான் என் மகனுடன்தான் பேசுகிறேன் என்று முழுமையாக நம்பிவிட்டேன்,” என நீல் தெரிவித்துள்ளார்.
தான் கடுமையான வாகன விபத்தில் சிக்கியுள்ளதாகவும், வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசியதற்காக தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் தொலைபேசியில் பேசிய மற்றொரு நபர், தன்னை பிரையனின் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
நீலின் மகனை ஜாமீனில் விடுவிக்க 6,000 டொலர்கள் தேவைப்படுவதாகவும், பணம் செலுத்தப்படாவிட்டால் அவர் அன்றிரவு சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்தில் அதிக வேலைப்பளு இருப்பதால், பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நீலின் வீட்டிற்கு உபெர் வாகனம் ஒன்றை அனுப்புவதாகவும், அதில் வரும் நபரிடம் பணத்தை ஒப்படைக்குமாறும் கூறியுள்ளார்.
தனது மகன் ஆபத்தில் இருப்பதாக அஞ்சிய நீல், உடனடியாக 6,000 டொலர்களை ஒரு பார்சலில் வைத்து, வீட்டிற்கு வந்த உபெர் ஓட்டுநரிடம் ஒப்படைத்துள்ளார்.
மறுநாள் காலை தனது மகனைத் தொடர்புகொண்ட நீல், “வழக்கறிஞருடனான சந்திப்பு எவ்வாறு முடிந்தது?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவரது மகன், “எந்த வழக்கறிஞர்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டுள்ளார்.
“நேற்று உனக்கு விபத்து நடந்ததே?” என்று நீல் கேட்டபோது, தனக்கு எந்த விபத்தும் நடைபெறவில்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் தான் மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்டதை நீல் உணர்ந்துள்ளார்.
10 விநாடி குரல் பதிவு போதும்!
அவசரகால மோசடிகள் தற்போது உலகளவில் வேகமாகப் பரவி வருகின்றன. முன்னர் குற்றவாளிகள் உறவினர் அல்லது நண்பரைப் போலப் பேசி மக்களை ஏமாற்றி வந்தனர்.
ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் குரலில் கிடைக்கும் சில விநாடிப் பதிவை வைத்து, அவரைப் போலவே பேசக்கூடிய போலிக் குரலை உருவாக்க முடிவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரின் குரலில் இருந்து சுமார் 10 விநாடிகள் கொண்ட ஒலிப்பதிவு கிடைத்தாலே, ‘Voice Cloning’ தொழில்நுட்பத்தின் மூலம் அவரது குரலைப் போன்ற போலிக் குரலை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
உறவினர் விபத்தில் சிக்கியுள்ளார், கைது செய்யப்பட்டுள்ளார் அல்லது உடனடியாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி அழைப்புகள் வந்தால், பதற்றத்தில் பணத்தை அனுப்ப வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அழைப்பைத் துண்டித்துவிட்டு, சம்பந்தப்பட்ட உறவினரை அவருடைய வழக்கமான தொலைபேசி எண்ணில் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜாமீன் அல்லது நீதிமன்றக் கட்டணம் என்ற பெயரில் பணம், பரிசு அட்டைகள் அல்லது கிரிப்டோகரன்சி கோரப்படுமானால், அது மோசடியாக இருக்கக்கூடும் என்பதால் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.