Reading Time: < 1 minute

கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் நேற்று பட்டப்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஏர்ல்ஸ்பிரிட்ஜ் புலிவார்ட் மற்றும் ஈடன்புரூக் ஹில் டிரைவ் சந்திப்பிற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கடுமையான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவரைக் மீட்டுள்ளனர்.

உடனடியாக அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸ் பரிசோதகர் ஆண்ட்ரூ ஹாரிஸ் ஞாயிறு மாலை ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்தவரின் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர், கருப்பு நிற ஹூட் (Hooded) ஆடைகளை அணிந்திருந்த இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

அவர்களை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பின்னர், தற்போது பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம் என பரிசோதகர் ஹாரிஸ் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு நடுத்தெருவில் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரும் சந்தேகநபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்களா அல்லது அவர்கள் அதே பகுதியில் வசிப்பவர்களா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இது ஒரு பரபரப்பான குடியிருப்புப் பகுதி என்பதால், சம்பவத்தின் போது வீதிகளில் மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது. எனவே, இச்சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகள் யாராவது இருந்தால் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பீர்ல் பொலிஸாரின் கொலைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். ஆதாரங்களைச் சேகரிக்கும் பொருட்டு அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.