Reading Time: < 1 minute

பயண மருத்துவக் காப்பீடு வைத்திருந்தபோதிலும், மெக்சிகோ சுற்றுலா சென்ற ஒண்டாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு $147,000-க்கும் மேற்பட்ட மருத்துவக் கட்டணம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

ஒஷாவாவைச் சேர்ந்த பஹோஸ் அலி என்பவர், கடந்த 2024 ஏப்ரல் மாதம் தனது காதலியுடன் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். பயணத்திற்கு முன், Manulife நிறுவனத்தின் Global Youth All-Inclusive பயணக் காப்பீட்டையும் அவர் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மெக்சிகோ சென்ற இரண்டு நாட்களிலேயே அவருக்கு திடீரென தொடர் வலிப்பு நோய்த்தாக்கங்கள் ஏற்பட்டன. பின்னர் அவர் கோமா நிலைக்குச் சென்றதால், அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு எட்டு நாட்கள் சிகிச்சை பெற்ற பின், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் கனடாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டார்.

ஆரம்பத்தில் மருத்துவச் செலவுகள் காப்பீட்டின் மூலம் கையாளப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சுமார் ஓராண்டுக்குப் பிறகு அவரது காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து $147,502 கனேடிய டாலர்களை திருப்பிச் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காப்பீட்டு நிறுவனம் கூறியதாவது, பயணத்திற்கு முந்தைய 90 நாட்களில் எந்தவொரு முன்கூட்டிய உடல்நலப் பிரச்சனையும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனை காப்பீட்டில் இருந்ததாகும்.

பஹோஸ் அலி, தனது பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவரை அணுகியிருந்ததாக கூறப்படுகிறது. இதை முன்கூட்டிய உடல்நலப் பிரச்சனையாகக் கருதி காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அந்த காய்ச்சலுக்கும் பின்னர் ஏற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சனைக்கும் தொடர்பில்லை என கனடா மருத்துவர்கள் தெரிவித்திருந்தாலும், காப்பீட்டு நிறுவனத்திடம் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்த சம்பவம், வெளிநாடு செல்லும் முன் பயணிகள் தங்கள் பயணக் காப்பீட்டு விதிமுறைகள், குறிப்பாக “pre-existing condition” தொடர்பான நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.