கனடாவில் தீவிபத்தில் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான 18 வயது மாணவி ஒருவருக்கு, தோல் மாற்று அறுவைச் சிகிச்சையைத் தவிர்த்து ‘எக்சோசோம்’ தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தீக்காயமடைந்த ஒருவருக்கு எக்சோசோம் சிகிச்சை அளிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என ஹாமில்டன் சுகாதார அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
ரொறன்ரோவைச் சேர்ந்த வெஸ்டர்ன் பல்கலைக்கழக மாணவியான கெய்ட்லின் ஜெஃப்ரி (Kaitlin Jeffrey), கடந்த டிசம்பர் மாதம் லண்டன் நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கினார்.
அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒன்ராறியோவின் இரண்டு முக்கிய பிராந்திய தீக்காயச் சிகிச்சை மையங்களில் ஒன்றான ஹாமில்டன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தோல் மாற்றுச் சிகிச்சையைத் தவிர்க்க முயற்சி
கெய்ட்லினின் முகம் மற்றும் கழுத்தில் தோல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கமாக இருந்ததாக தீக்காயச் சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்க் ஜெஷ்கே தெரிவித்துள்ளார்.
சிறந்த முறையில் தோல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சருமத்தை முற்றிலும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது. குறிப்பாக முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அது வடுக்கள் மற்றும் ஒட்டுப்போட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, கெய்ட்லின் மற்றும் அவரது பெற்றோரின் அனுமதியுடன், மனிதாபிமான அடிப்படையில் எக்சோசோம் சிகிச்சையைப் பயன்படுத்துவதற்காக ஹெல்த் கனடாவிடம் அவசர விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஹெல்த் கனடா எதிர்ப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து, சில நாட்கள் இடைவெளியில் கெய்ட்லினுக்கு இரண்டு முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட சுமார் ஒரு டிரில்லியன் எக்சோசோம் துகள்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
எக்சோசோம் என்றால் என்ன?
எக்சோசோம்கள் என்பவை உடலிலுள்ள செல்களால் வெளியிடப்படும் மிகச்சிறிய துகள்களாகும். அவை ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்கு தகவல்களை எடுத்துச் சென்று, திசுக்களின் மறுசீரமைப்பு, காயங்கள் விரைவாகக் குணமடைதல் மற்றும் வீக்கத்தைக் குறைத்தல் போன்ற செயல்களுக்கு உதவுகின்றன.
தீக்காயச் சிகிச்சைக்காக எக்சோசோம்களைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், மனித தீக்காய நோயாளிக்கு இந்தச் சிகிச்சை பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து கெய்ட்லின் எதிர்பார்த்ததைவிட விரைவாகக் குணமடைந்ததுடன், அவரது முகத்தில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இது தற்போது அனைவருக்கும் வழங்கப்படும் வழக்கமான சிகிச்சை அல்ல என்றும், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த மேலதிக மருத்துவ ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது உண்மையிலேயே ஓர் அற்புதம்” என்று தனது முகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கெய்ட்லின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தீவிபத்தால் ஏற்பட்ட காயங்கள் தனது உடலை மட்டுமின்றி மனநலத்தையும் ஆழமாகப் பாதித்ததாகக் கூறிய அவர், குறிப்பாக தனது முகத்தில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றம் வாழ்க்கையில் மீண்டும் முன்னோக்கிச் செல்ல உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆய்வுகள் வெற்றிபெற்றால், எதிர்காலத்தில் கனடாவிலும் உலகின் பிற நாடுகளிலும் தீக்காய நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை முறையாக எக்சோசோம் சிகிச்சை உருவாகலாம் என மருத்துவக் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.