Reading Time: < 1 minute

கனடாவில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற Thermos பிராண்ட் உணவு மற்றும் பானக் கலன்களால் நுகர்வோருக்குக் காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் சந்தையிலிருந்து மீளப் பெறப்படுகின்றன.

Tamil Business Directory

இதுகுறித்து Health Canada அவசர பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Canadian Thermos Products Inc. நிறுவனத்தால் கனடாவில் ஜனவரி 2009 முதல் நவம்பர் 2021 வரை விற்பனை செய்யப்பட்ட சில Thermos Stainless King Food Jars மற்றும் Sportsman Food & Beverage Bottles ஆகியவை இந்த recall நடவடிக்கைக்குள் அடங்குகின்றன.

மீளப் பெறப்படும் தயாரிப்புகள்:

Stainless King Food Jars – ஜூலை 2023க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட SK3000 மற்றும் SK3020 மாடல் எண்களைக் கொண்ட உணவுக் கலன்கள்.

Thermos Sportsman Food & Beverage Bottle – 2016ஆம் ஆண்டுடன் உற்பத்தி நிறுத்தப்பட்ட SK3010 மாடல் எண் கொண்ட உணவு மற்றும் பானக் கலன்.

இந்த தயாரிப்புகளின் மூடிகளில் உள்ள stopper பகுதியில், உள்ளக அழுத்தத்தைக் குறைக்கும் pressure relief அமைப்பு நடுவில் வடிவமைக்கப்படவில்லை. இதனால், கெட்டுப்போகக்கூடிய உணவு அல்லது பானங்களை நீண்ட நேரம் இந்த கலன்களில் வைத்திருந்தால், உள்ளே வாயு அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

அவ்வாறு அழுத்தம் உருவான நிலையில் கலனைத் திறக்கும் போது, stopper திடீரென பலத்த விசையுடன் வெளியே பாயக்கூடும். இதனால் முகம் மற்றும் கண்களுக்கு கடுமையான தாக்கம் ஏற்படுவதோடு, வெட்டுக்காயங்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக Health Canada எச்சரித்துள்ளது.

ஜூன் 24, 2026 நிலவரப்படி, இந்த தயாரிப்புகள் தொடர்பாக கனடாவில் 10 சம்பவங்கள் நிறுவனத்திற்குப் பதிவாகியுள்ளன. அவற்றில் 3 காயம் சம்பவங்களும் அடங்கும்.

கனடாவில் மொத்தம் 1,209,104 பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடல் எண்களைக் கொண்ட Thermos தயாரிப்புகள் தங்களிடம் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு Health Canada நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மேலதிக தகவல்களுக்கு Canadian Thermos Products Inc. இணையதளத்தை பார்வையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Health Canada மேலும் நினைவூட்டியதாவது, கனடாவில் recall செய்யப்பட்ட தயாரிப்புகளை மீண்டும் விற்பனை செய்வதும், பிறருக்கு வழங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.