Reading Time: < 1 minute

கனடாவிற்கு அண்மைக் காலங்களில் புலம்பெயர்ந்த புதிய குடியேறிகள் மத்தியில் சொந்தமாக வீடு வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Tamil Business Directory

அதேவேளை, கனடாவில் பிறந்த உள்நாட்டு மக்களிடையே வீட்டுரிமை வீதம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று கனடாவிற்கு வந்தவர்கள், நாட்டில் குடியேறிய முதல் ஐந்து ஆண்டுகளில் வீட்டுச் சந்தைக்குள் எவ்வாறு நுழைந்தனர் என்பதை இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது.

கனடாவின் ஏழு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, வீட்டு விலைகள் அதிகரித்தமை மற்றும் பொருளாதாரச் சவால்கள் நிலவிய போதிலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது புதிய குடியேறிகள் விரைவாக சொந்த வீடுகளை வாங்கியுள்ளனர்.

ஒன்ராறியோவில் வீட்டுரிமை அதிகரிப்பு

ஒன்ராறியோ மாகாணத்தில் குடியேறி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த புதிய குடியேறிகளின் வீட்டுரிமை வீதம், 2018ஆம் ஆண்டில் 35.7 சதவீதமாக இருந்தது.

இந்த வீதம் 2021ஆம் ஆண்டில் 40.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆனால் இதே காலப்பகுதியில், 25 முதல் 54 வயதுக்குட்பட்ட கனடாவில் பிறந்தவர்களின் வீட்டுரிமை வீதம் 50.7 சதவீதத்திலிருந்து 47.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கனடாவில் வசிக்கும் காலம் முக்கியம்

குடியேறிகள் கனடாவில் வசிக்கும் காலத்தின் நீளம், அவர்கள் சொந்தமாக வீடு வாங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

பெரும்பாலான குடியேறிகள் கனடாவிற்கு வந்த ஆரம்ப ஆண்டுகளில் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று, வருமானத்தை அதிகரிப்பதுடன் கனேடிய கடன் வரலாற்றையும் கட்டியெழுப்புகின்றனர்.

அதன் பின்னரே அடமானக் கடனுக்கான தகுதியைப் பெற்று சொந்த வீடுகளை வாங்குவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

பொருளாதாரப் பிரிவு குடியேறிகள் முன்னிலை

குடியேற்றப் பிரிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பொருளாதாரப் பிரிவின் கீழ் கனடாவிற்கு வந்தவர்களே அதிகளவில் வீடுகளைச் சொந்தமாக வாங்கியுள்ளனர்.

அவர்களுக்கு அடுத்ததாக குடும்ப அனுசரணைத் திட்டத்தின் மூலம் வந்தவர்களும், குறைந்த வீட்டுரிமை வீதத்துடன் அகதிகளாக வந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

குடியேறிகள் பிறந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் அடிப்படையிலும் வீட்டுரிமை வீதங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்த குடியேறிகள் ஒன்ராறியோ, அல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் அதிகளவில் வீடுகளை வாங்கியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

புதிய குடியேறிகள் கனடாவின் வீட்டுச் சந்தைக்குள் முன்னைய காலங்களைவிட விரைவாக நுழைந்து வருகின்ற போதிலும், வீட்டு விலை, வருமானம், குடியேற்றப் பிரிவு மற்றும் கனடாவில் வசித்த காலம் போன்றவை வீட்டுரிமையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகத் தொடர்ந்து விளங்குகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.