Reading Time: < 1 minute

கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆண்ட்ரியா பார்பர் , தான் பதிவிட்ட சமூக வலைதளப் பதிவில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, நேற்று வியாழக்கிழமை சட்டசபையில் கண்ணீர் விட்டு மன்னிப்புக் கோரினார்.

Tamil Business Directory

‘தி ரூம்ஸ்’ (The Rooms) எனும் மாகாண கலைக்கூடத்தின் புகைப்படத்தை ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ (Generative AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்து பகிர்ந்தமைக்காக அவர் இந்த மன்னிப்பைத் தெரிவித்தார்.

அமைச்சர் பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில், முதலாம் உலகப் போரில் உயிரிழந்த அரச நியூஃபவுண்ட்லேண்ட் படைப்பிரிவினரின் நினைவாக கலைக்கூடத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ‘கரிபு’ (Caribou – ஒரு வகை மான்) சிலை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘The Rooms’ என்ற உரை சேர்க்கப்பட்டிருந்தது.

இது கலைஞர்களையும், போர் வீரர்களையும் அவமதிக்கும் செயல் என எதிர்க்கட்சியான லிபரல் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை முதன்முதலில் கேள்வி எழுப்பப்பட்டபோது, தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என அமைச்சர் மறுத்திருந்தார்.

ஆனால், புதன்கிழமை தனது தவறை ஒப்புக்கொண்ட அவர், வியாழக்கிழமை சட்டசபையில் உரையாற்றும் போது உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.

“நியாயமான விமர்சனத்திற்கும், திட்டமிட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது; நான் அனுபவிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது” என்று சமூக வலைதளங்களில் தன்னை நோக்கி வீசப்படும் கேலிப் பேச்சுகள் குறித்து அவர் ஆதங்கப்பட்டார்.

இதற்கிடையில், அமைச்சரின் கண்ணீர் உரையைத் தொடர்ந்து பேசிய லிபரல் கட்சி உறுப்பினர் லிசா டெம்ப்ஸ்டர், கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியின் கடமை என்றும், இதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என்றும் கூறினார்.

எனினும், சமூக வலைதளங்கள் தற்போது “மிகவும் மோசமான இடமாக” மாறிவிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆளும் தரப்பு அமைச்சர்கள் பேசுகையில், கடந்த கால லிபரல் ஆட்சியிலும் ஏஐ தொடர்பான குளறுபடிகள் இருந்ததைச் சுட்டிக்காட்டி, ஒரு தனிநபரின் தவறை மட்டும் இலக்கு வைப்பது முறையற்றது எனத் தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.