Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள Sault Ste. Marie நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் “Mayor for a Day” போட்டியில், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர் வெற்றி பெற்று கவனம் பெற்றுள்ளார்.

Tamil Business Directory

Holy Cross Catholic School-இல் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயிலும் Adelynn Somme என்ற சிறுமியே இந்த ஆண்டுக்கான “ஒரு நாள் மேயர்” போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இளைய தலைமுறையினர் உள்ளூர் நிர்வாகம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் நோக்கில், Sault Ste. Marie நகரம் இந்த போட்டியை நடத்தி வருகிறது.

நகரம் தொடர்பான தனது யோசனைகளை சுவாரஸ்யமாகவும், அதே நேரத்தில் சமூக அக்கறையுடனும் வெளிப்படுத்திய Adelynn-ன் வீடியோ சமர்ப்பிப்பு வெற்றிக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டது.

தான் மேயராக இருந்தால், முதலில் நகர சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்வேன் என Adelynn தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மனநலன் தொடர்பான பிரச்சினைகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, குழந்தைத்தனமான அழகான யோசனையாக, நகரில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை கடந்தால், மக்களுக்கு இலவச ஐஸ்கிரீம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, Adelynn Sault Ste. Marie நகர மேயர் Matthew Shoemaker-ஐ சந்திக்க உள்ளார். அத்துடன், நகர மன்ற அலுவலகத்தையும் பார்வையிட உள்ளார். மேலும், ஜூன் 22ஆம் திகதி நடைபெறும் நகர கவுன்சில் கூட்டத்தை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Adelynn படிக்கும் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கும் ஒரு சிறப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது. மேயர் Matthew Shoemaker அவர்களைச் சந்திக்க உள்ளதுடன், அந்த வகுப்புக்கு பீட்சா விருந்தும் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டி, மாணவர்களுக்கு உள்ளூர் அரசின் செயல்பாடுகள் குறித்து ஆர்வத்தையும், சமூகப் பொறுப்புணர்வையும் உருவாக்கும் நல்ல முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.