Reading Time: < 1 minute

வட அமெரிக்காவின் போக்குவரத்து நெரிசல்மிக்க நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் டொரண்டோவில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் போது ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் போக்குவரத்துத் துறையினர் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.

Tamil Business Directory

குறிப்பாக, ஜூன் 12 ஆம் திகதி டொரண்டோ மைதானத்தில் கனடா மற்றும் போஸ்னியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் அதேவேளை, ரோஜர்ஸ் சென்டரில் புளூ ஜேய்ஸ் மற்றும் யாங்கீஸ் அணிகளுக்கு இடையிலான பேஸ்பால் போட்டியும் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் இலட்சக்கணக்கான மக்கள் நகரின் மையப்பகுதியில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து ரசிகர்களுக்கு மாத்திரமன்றி, அன்றாட வேலைகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நகரின் போக்குவரத்துத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக உலகக்கோப்பைக்கான டொரண்டோ நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷரோன் போலன்பாக் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற மேஜர் லீக் பேஸ்பால் (World Series), டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் போது ஏற்பட்ட போக்குவரத்து அனுபவங்களைக் கொண்டு இந்த முறை திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போட்டி நடைபெறும் நாட்களில் சுமார் 44,000 மேலதிக பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், மெற்றோலின்க்ஸ் (Metrolinx) மற்றும் டொரண்டோ போக்குவரத்து ஆணையம் (TTC) ஆகியவை கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகளை இயக்கத் தீர்மானித்துள்ளன.

கடந்த ஆண்டு பேஸ்பால் போட்டியின் போது போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடுத்தெருவில் தவித்ததைப் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படாது என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பை தொடரானது டொரண்டோ மற்றும் கனடா மீதான முதல் அபிப்பிராயத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும். எனவே, போக்குவரத்து நெரிசல்கள் இன்றி மக்கள் இலகுவாகப் பயணிக்கச் செய்வது அவசியமாகும் என பல்கலைக்கழக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.