Reading Time: < 1 minute

மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால், கனடாவில் உணவுப்பொருட்கள் விலை உயரலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Tamil Business Directory

உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.

அவ்வகையில், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து, எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.

குறிப்பாக உலகின் மொத்த எண்ணெயில் 20 சதவிகிதம் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக கொண்டுவரப்படும் நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், எரிபொருட்களுக்கு பிரச்சினை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால், கனடாவில் உணவுப்பொருட்கள் விலை உயரலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், கனடா, எண்ணெய்க்காக வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் நாடு அல்ல.

என்றாலும், வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் விலைகள், உலக அளவில் முடிவு செய்யப்படுகின்றன. ஆக, உலகின் ஒரு பக்கத்தில் பொருட்கள் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது உலகின் மறுபக்கத்திலுள்ள நாடுகள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இன்னொரு விடயம் என்னவென்றால், பல நாடுகளைப்போல கனடாவிலும் உணவுப்பொருட்கள் பல, வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

பெட்ரோல் டீசல் விலை உயர்வதால், அந்த பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு அதிகரிக்கும்.

அதாவது, பொருட்களை அனுப்பும் நிறுவனங்கள் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, அந்த கூடுதல் விலையையும் பொருள் வாங்கும் நிறுவனத்தின் மீது சுமத்த, அந்த பொருட்களை வாங்கும் பல்பொருள் அங்காடிகள், கடைகள், அதை நுகர்வோர் மீது சுமத்துவார்கள்.

ஆக மொத்தத்தில், ஈரானில் நடக்கும் போர், நம் வீட்டில் சாப்பாட்டு மேசையில் வைக்கப்படும் உணவுப்பொருட்கள் விலையை உயர்த்தியிருக்கும்.

இப்படித்தான் எங்கோ நடக்கும் போர்கள், வேறெங்கோ வாழும் மக்களை பாதிக்கின்றன.

ஆக, ஏற்கனவே கோவிட் காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் அல்லது மளிகைப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையில், ட்ரம்பின் வரிவிதிப்புகள் கூடுதல் சுமையை ஏற்படுத்த, இப்போது, ஈரான் போரும் சேர்ந்துகொண்டு உணவுப்பொருட்கள் விலையை அதிகரிக்க இருக்கின்றன.

தோராயமாக கணக்கிட்டால், ஒவ்வொரு முறை பெட்ரோல் அல்லது டீசல் அல்லது மொத்தத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போதும், சராசரி கனேடிய குடும்பம் ஒன்று உணவுக்காக செலவிடும் தொகையில் ஆண்டுக்கு 150 முதல் 200 டொலர்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.