Reading Time: < 1 minute

கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து பலியான வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.

அந்த வழக்கு தொடர்பாக ப்ளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் (Steve Shand) மற்றும் ப்ளோரிடாவில் வாழும் இந்தியரான ஹர்ஷ்குமார் ரமன்லால் பட்டேல் (Harshkumar Ramanlal Patel) ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அந்நியர்களை அமெரிக்காவுக்குள் கடத்தும் முயற்சியில் அவர்களுக்கு காயம் ஏற்படுத்தியது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது, தனிப்பட்ட முறையிலான பண மற்றும் பிற ஆதாயங்களுக்காக அவர்களைக் கடத்த உதவியது முதலான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு விவரம் வெளியாகியுள்ளது. ஹர்ஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ஸ்டீவுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹர்ஷ்குமாரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.