Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழகக் கல்வி பெற்ற பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

Tamil Business Directory

Council of Ontario Universities அமைப்பிற்காக Stokes Economics நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 2026 முதல் 2035 வரை ஒன்றாரியோவில் மொத்தம் 1,004,864 பல்கலைக்கழகக் கல்வி பெற்ற பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க ஆண்டுக்கு சராசரியாக 100,500 பட்டதாரிகள் தேவைப்படும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய STEM துறைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற வேகமாக வளர்ந்து வரும் துறைகளுக்கு 212,980 பட்டதாரிகள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக சுகாதாரத் துறையில் சுமார் 149,000 பணியாளர்கள் தேவைப்படும் என்றும் ஆய்வு கூறுகிறது.

வணிகம் மற்றும் நிதித்துறைகளில் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளுக்காக 195,316 பட்டதாரிகள் தேவைப்படுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

University of Toronto பேராசிரியர் Glen Jones கருத்து தெரிவிக்கையில், இந்த ஆய்வு எதிர்காலத்தில் உயர்கல்விக்கான தேவை வலுவாகவே இருக்கும் என்பதை காட்டுகிறது என்றார்.

எனினும், மாறிவரும் குடிவரவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை போன்றவை உயர்கல்வி துறைக்கும் தொழிலாளர் சந்தைக்கும் சவாலாக அமையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஒன்றாரியோ அரசு அண்மையில் உயர் கல்வி மற்றும் தொழிலாளர் பயிற்சிக்காக 1.7 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தேவை அதிகமுள்ள துறைகளில் 70,000 கூடுதல் post-secondary இடங்கள் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிதி தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நிதி போதுமானதாக இல்லை என Ontario Confederation of University Faculty Associations தலைவர் Rob Kristofferson தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான OSAP நிதியுதவி குறைப்பு, பல மாணவர்களை அதிக கடன் சுமைக்கு தள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.