பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kitimat நகராட்சி, இளைஞர்களை உள்ளூராட்சி தேர்தல்களில் ஈடுபடுத்தும் நோக்கில், வித்தியாசமான “Dog Mayor” தேர்தல் முயற்சியை ஆரம்பித்துள்ளது.
B.C. மாகாண நகராட்சி தேர்தல்களுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், Gus மற்றும் Koko என்ற இரண்டு நாய்கள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இவை உள்ளூர் பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களைச் சந்திப்பதுடன், Canada Day அணிவகுப்பிலும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளன.
Gus தனது தேர்தல் வாக்குறுதிகளில், அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் சுகாதார சேவைகள் மற்றும் அதிகமான fire hydrants அமைப்பதை முன்வைக்கிறது. மறுபுறம் Koko, நாய் உரிமையாளர்களுக்கான property tax குறைப்பும், அவசர சேவை வாகனங்களில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற siren ஒலி அமைப்பும் வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால், இந்த தேர்தல் நகைச்சுவையாக மட்டுமல்ல; Kitimat நகராட்சியின் உண்மையான தேர்தல் நாளான அக்டோபர் 17 அன்று, மனித மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கான வாக்குப்பதிவுடன், அனைத்து வயதினரும் Gus அல்லது Koko ஆகியோரில் ஒருவருக்கு “Dog Mayor” ஆக வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
District of Kitimat நகராட்சியின் தகவலின்படி, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், இளைஞர்களுக்கு உள்ளூராட்சி நிர்வாகம், மேயர் மற்றும் கவுன்சிலர்களின் பொறுப்புகள், நகராட்சி கூட்டங்கள் மற்றும் பொதுக் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். 2022ஆம் ஆண்டு Kitimat-இல் தகுதி பெற்ற வாக்காளர்களில் 21.7 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர் என்பதால், இம்முறை வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க நகராட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பாடசாலை சந்திப்புகளின்போது, நகராட்சி ஊழியர்கள் மாணவர்களுக்கு உள்ளூராட்சி எவ்வாறு செயல்படுகிறது, மேயர் மற்றும் கவுன்சிலர்கள் என்ன செய்கிறார்கள், எவ்வகையான பிரச்சினைகள் நகராட்சி மட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன என்பதையும் விளக்குகின்றனர்.
எந்த நாய் “Dog Mayor” தேர்தலில் வெற்றி பெற்றாலும், அதன் தேர்தல் வாக்குறுதிகள் உண்மையில் அமல்படுத்தப்பட வாய்ப்பு குறைவு. இருப்பினும், இந்த முயற்சி இளைஞர்கள் மற்றும் குடும்பங்களை தேர்தல் செயல்முறைக்கு நெருக்கமாக கொண்டு வரக்கூடிய சுவாரஸ்யமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.