ஆடை மாற்றும் அறையினுள் ஒளிப்பதிவு செய்த வாலிபர் கைது!

ரோரன்ரோ Eaton Centre வர்த்தக வளானத்தினுள் உள்ள ஆடை மாற்றும் அறையினுள் திருட்டுத்தனமாக ஒளிப்பதிவு செய்ததான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆண் ஒருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.


கடந்த வாரம், யூலை 6ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் குறித்த அந்த வர்த்தக நிலையத்தில் இரு பாலாரும் ஆடை மாற்றிப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் ஒன்றினுள் நுளைந்த குறித்த இந்த நபர், அங்கு சிறிய சதுர வடிவிலான மண்ணிற பொருள் ஒன்றினை தரையில் வைத்துவிட்டுச் சென்றதாக கூறபடுகிறது.

அவ்வாறு வைக்கப்பட்ட அந்தப் பொருளினுள் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்பதிவு சாதனம், அங்கே உடை மாற்றிய பல பெண்களை பதிவு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் அந்த அறையினுள் ஆடை மாற்றச் சென்ற பெண் ஒருவர் குறித்த அந்தப் பொருளினைக் கண்டு அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் அந்தப் பொருளைப் பரிசோதித்தபோது, அதற்குள் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை 22 வயது ஆண் ஒருவரைக் கைது செய்ததுடன், அவர் மீது திருட்டுத்தனமாக ஒளிப்பதிவு செய்த பத்து குற்றச்சாட்டுகளையும், தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டினையும் பதிவு செய்துள்ளனர்.

எனினும் குறித்த அந்த நபரின் அடையாளங்களை வெளியிடுவதில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த காவல்துறையினர், இன்று அவரது அடையாளத்தினை வெளியிட்டுள்ளனர். குறித்த அந்த நபர் ரொரன்ரோவைச் சேர்ந்த 22 வயதான சொகநாதன் உதயசங்கர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7ஆம் திகதி நீதிமன்றில் நிறுத்தப்பட்ட அவர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.