கடலில் நீந்தும்போது நோய்வாய்ப்பட்டு ஒருவர் பலி

வசாகா கடற்கரைப் பகுதியில் நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர், நீந்திக்கொண்டிருந்த போது உடல்நலக் கோளாறுக்கு ஆளானதால் உயிரிழந்து விட்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Mosley Street மற்றும் 6th Street North பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவியுடன் குறித்த அந்த நபர் நீந்திக்கொண்டிருந்த போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாகவும், உடனடியாகவே கரைக்கு கொண்டுவரப்பட்ட அவருக்கு உயிர்காப்பு முதலுதவிகள் வழங்கப்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் அவரைப் பொறுப்பேற்ற நிலையில், அவசர மருத்துவப் பிரிவினரால் அவர் Collingwood பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், எனினும் சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஒரு வார காலத்தினுள் குறித்த அந்தக் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மரணம் இது என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை பிரம்டனைச் சேர்ந்த 25 வயது ஆண் ஒருவரும் குறித்த அந்தக் கடற்கரையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.