ஒன்ராறியோ ஏரியில் விபத்து: ஒருவர் பலி

நேற்றைய தினம் ஒன்ராறியோ ஏரியில் தனிப்பட்ட நீர் உந்து ஊர்திகள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ரொரன்ரோ “ஹம்பர் பே” கடற்கரை ஓரமாக, Marine Parade Drive பகுதியில் நேற்றுக் காலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இரண்டு நீருந்து ஊர்திகள் மோதிக்கொண்ட இநத விபத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு ரொரன்ரோ காவல்துறையின் கடல்சார் பிரிவினர் விரைந்துள்ளனர்.

இரண்டு ஊர்திகளுமே ஒன்றாக சுற்றுவட்டப் பாதை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், ஒன்று மாறி ஒன்று பாய்ந்து சாகசம் புரிந்த போது அவை மோதிக்கொண்டதாகவும், அந்தக் கடற்கரைப் பகுதியில் உந்துருளியில் சென்ற வேளையில் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமபவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இரண்டு ஊர்திகளின் ஓட்டுனர்களையும் மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்படுவதாக அவசர மருத்துவப் பிரிவினர் முன்னர் தெரிவித்த போதிலும், அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து சம்பவித்தமைக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.