கனடாவின் தீர்மானத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டு!

இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது தமிழர்கள் மீது நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணை ஐ.நாவிடம் கோரும் கனேடிய நாடாளுமன்ற மக்களைவைத் தீர்மானத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.


உலகின் முதற்பெரும் அரசுகளில் ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இயற்றியிருப்பதானது, சிறிலங்காவின் உள்நாட்டுத் நீதிக்கட்மைப்பினையோ, வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கும் தீர்பாயங்களிலோயோ, தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை எனபதனையே இத்தீர்மானம் வெளிப்படுத்துவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இத்தீர்மானத்தைத் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கட்டமைப்பியல் இனவழிப்பு செய்யப்படுவதற்கான குற்றக் கருத்துரையாகப் பார்க்கிறது. பொறுப்புக்கூறல் என்பது அரசியல் தீர்வுடன் பிரிக்கவொண்ணாதபடி பிணைந்திருப்பது என்ற உண்மையின் அறிந்தேற்பாகவும் இத்தீர்மானத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பார்க்கிறது. ஐநா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்கா பற்றிய மையக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து ஐநா உறுப்பு நாடுகளில் கனடாவும் ஒன்று என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்தில் கொள்கிறது. மையக் குழுவின் ஏனைய உறுப்பு நாடுகளிடையே பொதுக்கருத்து ஏற்படச் செய்வதன் மூலம் இத்தீர்மானத்தை பொருளுடைத்தாக்க கனடா உறுதியான நிலையெடுக்கும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு நீதி தேடும் அயராத முயற்சியில் சிறிலங்காவின் இனவழிப்பு உள்ளிட்ட பன்னாட்டுக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை தொடர்சியாக வலியுறுத்தி வருகிற கனேடியப் தமிழ்க் அமைப்புக்களுக்கும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் தனது பராட்டத்தை தெரிவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம், இத்தீர்மானத்துக்கு ஒருமனதான இசைவு கிடைக்கச் செய்யும் முயற்சியில் பங்களிப்புச் செய்த கனடிய மரபு மற்றும் பன்மைப் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கான நாடளுமன்றச் செயலர் மதிப்புக்குரிய கரி ஆனந்தசங்கரி அவர்களுக்கும் நன்றியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீர்மானத்தை முன்மொழிந்தமைக்காக வெளியுறவு பன்னாட்டு வளர்ச்சி குறித்தான நிலைக்குழுவின் பன்னாட்டு மனிதவுரிமைகள் பற்றிய உட்குழுவின் துணைத்தலைவர் தேசிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செரில் ஹாண்ட்கேசில் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது. இத்தீர்மானத்துக்கு ஒருமனதாய் இசைவு தெரிவித்தமைக்காக நாடாளுமன்ற மக்களைவில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பராட்டுகிறது. பழைமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்னெட் ஜெனூவிஸ், தாராளியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஷவுன் சென் உட்பட முன்னதாக இச்சிக்கல் குறித்து தீர்மானங்கள் முன்வைத்த நாடளுமன்ற உறுப்பினர்களையும் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.