நண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்!

கனடா – வான்கூவர் தீவில் கடந்த வாரம் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவன் தனது குடும்பத்துக்கு முதுகெலும்பாக இருந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மர முறிவிலிருந்து தனது நண்பர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போதே அவர் உயிரிழந்தார்.


ராய் கவர்ஹில் என்ற எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த சிறுவன் விக்ரோரியா லேன்ஸ்டோவ்ன் நடுத்தர பாடசாலையின் மாணவராவார்.

சூக்கி பகுதிக்கு அருகிலுள்ள கேம்ப் பர்னார்ட் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதிக்கு தனது வகுப்பு தோழர்களுடன் ராய் கவர்ஹில் பயணம் மேற்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று நாட்கள் அவர்கள் தங்களின் பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில். முதல் நாளான கடந்த புதன்கிழமை மதியம் ஒரு சிற்றோடைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது ஒரு மரம் குழுவினர் மீது முறிந்து வீழ்ந்துள்ளது.

குழுவினரை எச்சரித்து விரட்டிய ராய், மரத்தின் கீழ் சிக்குண்டார். அவரை மீட்பதற்கு பலமுறை முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அவரை உயிருடன் மீட்க முடியாமல் போனதாக ராயின் தாயார் திருமதி கவர்ஹில் தெரிவித்தார்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் அவர்கள் குடும்பத்துடன் தாய்லாந்திலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.