இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவேண்டும் – நாடாளுமன்றில் பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று தேவையெனக் கோரும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி ஆகியன தொடர்பான நிலையியல் குழுவில் இன்று நிறைவேற்றப்பட்டது.


ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் சென், நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் ஹார்ட்காசில் ஆகியோரால் கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டுஅபிவிருத்திக்கான பாராளுமன்றக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை பின்வருமாறு அமைந்துள்ளது,

“வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியற் குழு

  1. இலங்கையில் வன்முறையாலும், போரினாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது.
  2. இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து அண்மையில் இடம்பெற்ற வன்முறையைக் கண்டிக்கும் அதேவேளை, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தவாறு இன வெறுப்பையும், தீவிரவாதத்தையும் எதிர்கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.
  3. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.
  4. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்ட கடப்பாடுகளை தெளிவாக வரையறுத்த காலத்தினுள் நிறைவேற்றுமாறு கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்து ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது.
  5. 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போரின் இறுதிப் பகுதி உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கிறது.
  6. இந்தப் பிரேரணையை நாடாளுமன்றத்திற்கு அறிவித்து, 109 ஆம் இலக்க நிலையியல் கட்டளைக்கு அமைவாக இந்த அறிக்கைக்கு விரிவான பதில் ஒன்றை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.”

என்பதான ஆறு கோரிக்கைகள் இந்த பிரேரணையில் கூறப்பட்டிருந்தது.

“பல மாத கால கடுமையான முயற்சியின் பின்னரும், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்பின் பின்னரும், கனடாவில் உள்ள கட்சிகள் இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இணங்கியமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முள்ளிவாய்க்காலின் பத்தாம் ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வாண்டில், பாதிக்கப்பட்ட தமிழர்களையும், அட்டூழியங்களில் உயிர் தப்பியோரையும் உலகம் மறந்துவிடவில்லையென்பதை நினைவூட்டுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அனைத்துக் கனேடியர்களும் ஒரு குரலாக ஒன்றிணைய வேண்டுமென்பதையும் இது கட்சி சார்ந்த விடயம் அல்லவென்பதையும் நாம் இன்று காண்பித்துள்ளோம் என ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தமிழர்களின் நீதிக்கான ஒரு சரியான முன்னகர்வாக அமைகின்றது.