மிசிசாகாவில் துப்பாக்கிச் சூடு: ஊசலாடிக்கொண்டிருக்கும் உயிர்

மிசிசாகாவில் பல்வேறு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 28 வயது ஆண் ஒருவர், உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Britannia வீதி மற்றும் Douguy Boulevard பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றில், புதன்கிழமை இரவு 11.24 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அந்த வர்த்தக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஆண் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததாகவும், உடனடியாகவே அவர் ரொரன்ரோ தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் சிலரிடம் பேசியுள்ள போதிலும், போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனவும், சம்பவம் இடம்பெற்ற வேளையில் பெருமளவானோர் அங்கே இருந்திருக்கக்கூடும் என்பதனால், சம்பவத்தை நேரில் கண்டோர், அது தொடர்பில் தகவல் அறிந்தோர், அல்லது சம்பவம் தொடர்பிலான ஒளிப்பதிவு ஆதாரங்களை வைத்திருப்போர் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் காவல்தறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.