Notre Dame தேவாலயத்தை மீள கட்டியெழுப்ப, மரம் மற்றும் உருக்கு போன்றவற்றை வழங்க கனடா பிரதமர் உறுதி!

பிரான்சுக்கு விஜயம் செய்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தீயினால் பாரிய அழிவினை சந்தித்த, வரலாற்று புகழ்மிக்க Notre Dame தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


பிரான்சின் முக்கிய அடையாளம் என்பதோடு மட்டுமன்றி, உலகின் முக்கிய வரலாற்று சின்னங்களில் ஒன்றாக உள்ள அத்தேவாலயத்தை மீள கட்டியெழுப்ப, மரம் மற்றும் உருக்கு போன்றவற்றை வழங்க, கனடா தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அதேவேளை, பாரிசில் வைத்து, நியூசிலாந்து பிரதமருடன், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில், வன்முறை மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் விடயங்கள் பரவுவதை கட்டுப்படுத்த, இருநாட்டு அரசுகளும், சமூக வலைத்தள நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் இவ்வொப்பந்தம் அமையவுள்ளது.

தீவிரவாதத்தையும் வன்முறையையும் பரப்புவதற்கான, மிக முக்கிய கருவிகளாக, சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த வாரம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.