மாகாண அரசின் நிதி வெட்டு எதிரொலி, டொரோண்டோவில் மேலதிக வரிகள்.

ஒண்டாரியோ மாகாண அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி வெட்டுக்களை சமாளிக்கும் விதமாக, டொரோண்டோவில் மேலதிக வரிகள் கொண்டுவரப்படலாம் எனும் அச்சம் உருவாகியுள்ளது.


நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய, இவ்வாறு மேலதிக வரிகள் அறிமுகப்படுத்தப்படுவது அவசியம் என, மாநகர முகாமையாளர் பரிந்துரைத்துள்ளார்.

டொரோண்டோவின் வரவுசெலவு திட்டம் ஏற்கனவே மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வரிகள் கொண்டுவரப்படுவதே ஒரு சாத்தியமான தீர்வு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நிதியாண்டில் இடைநடுவில் இவ்வாறு நிதி வெட்டுக்களை மேற்கொள்வது நகைப்புக்குரியது என்பதை, ஒண்டாரியோ மாகாண அரசு உணர்ந்துகொள்ளும் எனவும், மக்கள்மீது மேலதிக வரிகள் அமுல்படுத்தப்படுகின்றமை தவிர்க்கப்பட முடியும் என்றும், டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களில், டொரோண்டோவின் சேவைகளில், 180 மில்லியன் டொலர்கள் வரையிலான நிதி குறைப்புக்களை, ஒண்டாரியோ அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.