அலஸ்கா விமான விபத்து: கனேடியரும் பலி

நேற்று முன்தினம் அலஸ்காவில் இயற்கை காட்சிகளை பார்த்து மகிழும் வகையில் சுற்றுலா சென்றுகொண்டிருந்த இரண்டு சிறியரக விமானங்கள் நடு வானில் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் கனேடியர் என்று குறித்த அந்த சுற்றுலாவை ஒழுங்கு செய்யும் Princess Cruises என்படும், கலிபோர்னியாவைத் தளமாககொண்டு செயற்படும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


குறித்த அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 11 பேருடன் சென்று கொண்டிருந்த மிதக்கும் விமானத்துடன், கனேடியர் ஒருவரும் அவுஸ்திரேலியர் ஒருவரும் சென்றுகொண்டிருந்த விமானம் மோதியதாகவும், விமானம் நொருங்கி வீழ்ந்துவிட்ட நிலையில், குறித்த அந்த இருவரது சடலங்களும் இன்னமும் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த அந்த நிறுவனம், அவர்களது பெயர் விபரங்களை வெளியிடாத நிலையில், குறித்த அந்த விபத்தில் கனேடியர் ஒருவர் உயிரிழந்துவிட்டதனை கனேடிய வெளியுறவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இது தொடர்பிலான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் அங்குள்ள தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் உரிய உதவிகளை வழங்க அவர்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சு, இதில் உயிரிழந்த கனேடியரின் குடும்பத்தாருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.