அரசின் நிதி குறைப்பினால் பாடசாலை பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என TDSB அறிவித்துள்ளது.

ஒண்டாரியோ மாகாண அரசின் நிதி குறைப்பினால், 67 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறை உருவாகியுள்ளதாக TDSB தெரிவித்துள்ளமை, ஒரு பயமுறுத்தும் தந்திரோபாயம் என, முதல்வர் டக் ஃ போர்ட் குற்றம்சாட்டியுள்ளார்.


ஒண்டாரியோ மாகாண அரசு, கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள நிதி வெட்டுக்கள் காரணமாக, பல பணியிடங்களை தாம் அகற்றவேண்டி இருக்கும் என்பதுடன், பல பாடசாலை பேருந்து சேவைகளும் நிறுத்தப்படும் என, டொரோண்டோ பாடசாலை கழகமான TDSB அறிவித்துள்ளது.

இதனால் உருவாகியுள்ள 67 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையை அகற்றுவதை இலக்காக கொண்ட உத்தேச வரைபு, TDSBயின் கல்வித்துறை இயக்குனரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 பாடசாலைகளை ஒருங்கிணைக்கும் யோசனையும் இவ்வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒண்டாரியோவின் வரவுசெலவு திட்ட பற்றாக்குறையை இல்லாதொழிக்க, டொரோண்டோ பாடசாலை கழகமும் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென, மாகாண கல்வியமைச்சர் லிசா தொம்சன் நேற்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.