ஒன்ராறியோ காவல்துறைக்கான ஒதுக்கீட்டில் 46 மில்லியன் வெட்டு

ஒன்ராறியோ மாநிலத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் நோக்கில் பல்வேறு நிதி ஒதுக்கீட்டுகளை குறைத்துவரும் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம், தற்போது மாநில காவல்துறைக்கான ஒதுக்கீட்டில் இருந்தும் சுமார் 46 மில்லியன் டொலர்களை குறைப்பதற்கு திட்டமிட்டு வருகிறது.


ஒன்ராறியோ மாநிலத்திற்கான பாதீட்டில் தற்போது 11.7 பில்லியன் டொலர்கள் ப்ற்றாக்குறை காணப்படும் நிலையில், அடுத்த தேர்தலுக்குள் அதனை இல்லாது செய்வது சாத்தியமற்றதாக கருதப்படுகின்ற போதிலும், மாநில அரசாங்கம் சுகாதார ஆராச்சி, சட்ட உதவி, நூலக சேவைகள், சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றில் பல்வேறு நிதிக்குறைப்புகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் காவல்துறைக்கான நிதிக்குறைப்பினை மாநில காவல்துறையின் தலைமை புரிந்துகொள்ளும் எனவும், குறிப்பாக வாகனங்களுக்கான எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நிதிக்குறைப்பினை ஈடுசெய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிதிக்குறைப்பு காரணமாக காவல்துறைச் சேவையில் பணியில் உள்ளோர் எவரும் வேலை இழக்கும் நிலை ஏற்படாது என்று, சில்வியா ஜோன்ஸின் பேச்சாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.