முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும், அரிக்கன் லாம்பும் – நெருப்பு நினைவுகள்

இன்று ஞாயிறுக்கிழமை (May 12, 2019) டொரோண்டோவில் மூன்று இடங்களில் முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.


இறுதி யுத்தகளத்தில் பணியாற்றி இன்று இனப்படுகொலைச் சாட்சியாக இருக்கும் மருத்துவர் வரதராஜா அவர்களின் இறுதிப்போர்க்கால அனுபவம் ஆங்கிலத்தில் Kass Ghayouri என்பவரால் எழுதப்பட்ட, A note from no fire zone எனும் நூல் காலையில் வெளியிடப்பட்டது.

2010 இல் பசுபிக் பெருங்கடல் தாண்டி 492 ஈழத்தமிழர்கள் MV Sun Sea கப்பலில் கனடா வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுள் சிலரது முயற்சியால் முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்க்கால அனுபவங்கள் ‘முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரிலேயே தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற்பகல் நூல் வெளியிடப்பட்டது.

கடந்த பல வருடங்களாக ஈகுருவி நைற் (eKuruvi Night) என்று நடைபெறும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவையொட்டி இம்முறை ஈகுருவி லைற் (eKuruvi Light) என நிகழ்ந்தது.

A note from no fire zone வெளியீட்டில், விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்டு, இரு சிறுமியர் அரிக்கன் லாம்புகளை (Hurricane Lamp) அவையோருக்கூடாக எடுத்து முன்னுக்குக் கொண்டுவந்தனர். இந்த அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவசேவைகளை மருத்துவர் வரதராஜா வழங்கியிருந்ததை நினைவுகூருமுகமாகவே இந்த லாம்புகள் எடுத்துவரப்பட்டிருந்தன.

போரின் இறுதிக்காலத்தில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறையால் பெரிய கிடாரங்களில் கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்தக் கஞ்சியே பலரைப் பட்டினிச் சாவிலிருந்து காத்து, ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ என்று பெயர் பெற்றது.

முள்ளிவாய்க்கால் நூல் வெளியீட்டிலும் மற்றும் வழமையாக அறுசுவை உணவு பரிமாறப்படும ஈகுருவி நிகழ்விலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியே அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நாம் பட்ட துயரங்களை மறக்காமலிருக்வேண்டிய, அடுத்த தலைமுறைகளுக்கும் சொல்லவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

மூன்று நிகழ்வுகளிலும் இவற்றைச் செயற்படுத்தியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் அனைத்திலும், வீடுகளிலும் எம்மினம் அடைந்த துன்பத்தினை அடுத்த தலைமுறைக்கு கடத்த இனிவரும் முள்ளிவாய்க்கால் நினைவு காலங்களில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்படட்டும்.

யூதர்களுக்கு Passover Seder போல, ஆர்மீனியருக்கு மாதுளம்பழம் போல, முள்ளிவாய்க்கால் கஞ்சி ஈழத்தமிழருக்கும் நினைவுகூர்தலின் அடையாளங்களுள் ஒன்றாகட்டும்.