ரொரன்ரோ டவுன்ரவுனில் கத்திக்குத்து: மூவர் தேடப்படுகின்றனர்

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் இன்று காலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதல் சம்பவம் ஒன்று தோடர்பில் மூவரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Yonge street மற்றும் Gerrard street பகுதியில் வைத்து, 40 வயதான ஆண் ஒருவர் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவ இடத்திலிருந்து மூவர் தப்பிச் சென்றதாகவும், இறுதியாக அவர்கள் Yonge Streeஇல் தெற்கு நோக்கித் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கத்திக்குத்துக்கு இலக்கான நபர், சம்பவ இடத்தில் சுவாசித்தவாறு சுயநினைவுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் மூவரும் ஐந்து அடி எட்டு அங்குலத்திற்கும், ஆறு அடிக்கும் இடைப்பட்ட உயரமுடைய, கறுப்பு இன ஆண்கள் என்றும், அவர்களில் ஒருவர் கறுப்பு நிற குளிர் அங்கியும், கறுப்பு நிற காலணியும் அணிந்திருந்ததாகவும், பிறிதொருவர் மஞ்சள் நிற கோடுகளைக் கொண்ட கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.