பாகிஸ்தானை விட்டு கனடா வந்தடைந்தார் ஆசியா பீபி – யார் இவர்?

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த கிறித்துவ பெண் ஆசியா பீபி 12 மணிநேரங்களுக்கு முன்னால் பாகிஸ்தானைவிட்டு கனடாவுக்கு சென்றுவிட்டதாக அவரது வழக்கறிஞர் சாய்ஃப் உல் மாலூக் தெரிவித்துள்ளார்.


இவர் கனடா விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளார் என்பதை கனடிய ஊடகங்கள் செய்திகளாக பதிவுசெய்துள்ளன.

இவருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்ததை எதிர்த்து பெரும் போராட்டங்கள் எழுந்தன.

தண்டனை வழங்கப்பட்ட பின்னர், ஆசியா பீபி 8 ஆண்டுகளை தனிமை சிறையில் கழித்தார்,

தனது பக்கத்துவீட்டு பெண்ணுடன் நடைபெற்ற சண்டை ஒன்றில் அவர் முகமது நபிகளை அவமதிக்கும் விதமாக பேசிவிட்டார் என 2010ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தார் ஆசியா. நாடு முழுவதும் இது முக்கியதுவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்பட்டது.

ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என ஆசியா பீபி தெரிவித்து வந்தார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் குடும்பத்தினர் சிலர் கனடாவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தெய்வ நிந்தனை குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்குவதற்கு பாகிஸ்தானில் பெரும் ஆதரவு உள்ளது.

நாட்டைவிட்டு வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்ட சமயத்தில் அவர் ரகசியமான ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டவுடன் மத கடும்போக்காளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தாராளவாத கொள்கை கொண்டவர்கள் அவரை விடுவிக்க கோரினர்.

நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆசியா 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அண்டை வீட்டாருடன் விவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த வாக்குவாதமும் சாதாரணமான ஒரு விஷயத்திற்காகதான் தொடங்கியது. அவர்கள் லாகூர் அருகே பழம் பறித்துக் கொண்டிருந்த போது, ஒரு பக்கெட் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சனை தொடங்கியது.

தாங்கள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஆசியா அருந்திவிட்டார். இதனால், தங்கள் நம்பிக்கையின்படி அந்த தண்ணீரின் புனிதம் கெட்டுவிட்டது. இனி அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாது என்று கூறி சச்சரவிட்டனர்.

ஆசியா மதம் மாற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டதாகவும், அதற்கு மறுப்பாக முகமது நபியை ஆசியா நிந்தித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சச்சரவிட்டதை ஒப்புக் கொண்ட ஆசியா தொடக்கத்திலிருந்தே மத நிந்தனை குற்றத்தை மறுத்து வந்தார்.

ஆசியா விடுதலைக்கு பிறகு, அவருக்கு அடைகலம் தர பல நாடுகள் முன்வந்தன.