பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா!

வர்மா பட விவகாரத்தில் அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமும், நடிகர் விக்ரமும் பாலாவை அவமானப்படுத்தியதால் உடனடியாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அவர் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்த புகைப்படங்களும் வெளியாகின. கதையை அவர் ஏற்கெனவே தயார் செய்து வைத்துவிட்டார் என்றார்கள். அந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது.


ஆனால், சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்தில் மற்றொரு படமும் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, அவர் உடனடியாக தன்னால் படத்தில் நடிக்க முடியாது என பாலாவிடம் சொல்லிவிட்டாராம்.

எனவே, பாலா அடுத்து ஆர்யா மற்றும் அதர்வாவிடம் கேட்டிருக்கிறார். ஆர்யா கைவசம் வேறு படம் இல்லாததால் அவர் உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள். அதர்வாவும் அதில் நடிக்காமல் வேறு எதில் நடிப்பேன் என ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தின் நாயகியாக பிந்து மாதவி நடிக்கலாம் என்று ஒரு தகவல். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். விரைவில் இந்தப் படம் பற்றி பாலாவே அறிவிக்க உள்ளாராம்.