பனிச்சரிவில் சிக்குண்டோர் சடலங்களாக மீட்பு

அல்பேர்ட்டா Banff தேசியப் பூங்காவில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட பாரிய பனிச்சரிவில் சிக்கியதாக நம்பப்படும் மூன்று மலை ஏறிகளின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.


அமெரிக்கரான ஜெஸ் றொஸ்கெலி, ஒஸ்ரியர்களான டேவிட் டாமா மற்றும் ஹன்ஸ்யோர்க் ஆகியோர் பனிச்சரிவில் சிக்கிய நிலையில், அங்கு நிலவிய மோசமான அபாயகரமான வானிலை அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தடங்கல்களை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கனேடிய தேசிய பூங்காக்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், குறித்த அந்த மூன்றுபேரும் உயிரிழந்துவிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மலையேறிச் சென்ற அவர்கள் கடந்த புதன்கிழமை திரும்பிவராததை அடுத்து, அவர்களைத் தேடிச் சென்ற உலங்குவானூர்தி, குறித்த அந்தப் பகுதியில் பலத்த பனிச்சரிவு ஏற்பட்டிருந்ததை அவதானித்ததுடன், அங்கே மலையேறுவோர் பயன்படுத்தும் உபகரணங்களையும் கண்டுள்ளது.

எனினும் தொடர்ந்து தேடுதல்களை தொடரமுடியாத நிலை காணப்பட்டதாகவும், தற்போது அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.