ஹமில்ட்டனில் உள்ள உக்ரெய்ன் கலாசார நிலையம் தீக்கிரையானது

ஹமில்ட்டனில் உள்ள உக்ரெய்ன் கலாசார நிலையமானது தீக்கிரையானதில் அது பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Kenilworth Avenueவில் அமைந்துள்ள அந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை வேளையில் ஏற்பட்ட தீப்பரவல், அந்த கட்டிடத்தினை தொடர்ந்து பயன்படுத்த முடியாத வகையில் அழித்துவிட்ட போதிலும், இந்த தீப்பரவல் இடம்பெற்ற வேளையில் அந்த கட்டிடம் வெற்றிடமாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், தீச் சுவாலைகள் கட்டிடத்தின் கூரைக்கு மேலாக தெரியுமளவுக்கு எரிந்துகொண்டிருந்ததாகவும், தீயணைப்பு முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அதன் கூரை இடிந்து வீழந்ததாகவும், ஹமில்ட்டன் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சில மணிநேரமாக முன்னெடுக்கப்பட்ட கடுமையான முயற்சியின் பின்னர் தீப்பரவல் முழுமையான கட்டுப்படிட்டினுள் கொண்டுவரப்பட்ட போதிலும், ஆங்காங்கே காணப்பட்ட சிறு தீகளைத் தேடி அணைக்கும் நடவடிக்கையில் நேற்று முழுவதும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தீயணைப்பு நடவடிக்கைகளில் சுமார் 60 வீரர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீப்பரவலால் ஏற்பட்ட இழப்பு இன்னமும் கணிப்பிடப்படவில்லை என்ற போதிலும், கட்டிடத்தின் பெரும்பாலான பாகங்கள் தீயில் அழிந்துவிட்டதாக ஹமில்ட்டன் தீயணைப்புத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை, இன்று காலையில் ஒன்ராறியோ தீயணைப்பு படை அதிகாரிகளும் அங்கு பிரச்ன்னமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.