துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனை சென்று சேர்ந்த சிறுவன்

நேற்று இரவு ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றினைத் தொடர்ந்து, பதின்மவயதுச் சிறுவன் ஒருவர் தானாகவே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்துள்ள சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Islington Avenue மற்றும் Poplar Heights Drive பகுதியில், நேற்று இரவு 7.15 அளவில் இரண்டு வாகனங்கள் மிகவும் வேகமாகச் சென்றதையும், ஒரு வாகனத்தில் இருந்த பயணி ஒருவர் மற்றைய வாகனம் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையும், சம்பவத்தை நேரில் கண்டோர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, இரண்டு வாகனங்களுமே சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில், சிறிது நேரத்தின் பின்னர் துப்பாக்கிச் சூட்டுத் துளைகளுடன் வந்த ஒரு வாகனத்தில் இருந்த ஆண் ஒருவர் உள்ளூர் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், உடனடியாகவே அவசர நோயாளர் காவு வாகனம் மூலம் பிறிதொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அந்த நபருக்கு 17 வயது இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.