சித்திரைப்புதுவருடப் பிறப்பையொட்டி கனடா ஆலயங்களில் வழங்கப்படும் மருத்துநீர்!

நாளைய தமிழர் திருநாள் சித்திரை புது வருடத்தையொட்டி டொரோண்டோவின் பல ஆலயங்களில் மருத்து நீர் தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றது.


சில ஆலயங்களில் இலவசமாகவும், பல ஆலயங்களில் பணத்துக்கும் இது வழங்கப்படுகின்றது. எமது தாய்நாட்டில் மருத்து நீர் காலகாலமாக இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் புனித மருத்துநீரை பணத்துக்கு கொடுப்பதென்பதும், பெறுவதென்பதும் மத நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதே வேதம் படித்த ஞானிகளின் கருத்தாகும்.

பன்னெடுங்காலமாக இலவசமாகவே இருந்துவந்த இந்த மருத்துநீர் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களில் பணத்துக்கு விக்கப்படுத்தல் என்பது எதிர்கால எமது சந்ததியை, மத சடங்குகளில் ஒரு வியாபார தன்மை உள்ளதாக பார்க்கப்பட்டு, இதில் இருந்து ஒதுங்கும் நிலையையே உருவாக்கும்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு டொரோண்டோ தமிழின் (TorontoTamil.com) உள்ளம் கனிந்த சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இந்துப் பாரம்பரியத்தில் புனிதம் நிறைந்த மருத்து நீர்

சித்திரைப் புது வருடப் பிறப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தமிழ்ப் பஞ்சாங்கங்கள் சித்திரை மாதத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன. சித்திரை வருடப் பிறப்பன்று ‘மருத்துநீர்’ தேய்த்து நீராடுதல் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம் ஆகும்.

புத்தாண்டில் சகல துன்பங்களும் விலகி மகிழ்ச்சியான வாழ்வு மலரப் பிரார்த்தனை செய்து, குடும்ப மூத்தோரால் அல்லது குருவால் குடும்ப உறவுகளுக்கு தலையில் வைக்கப்படும் புனித நீரை மருத்துநீர் என்பார்கள்.

மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும்.

மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம். விகாரி வருட புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

தலையில் ஆலிலையும் , காலில் இலவமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போதும் முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.