வன்னி தமிழ் சங்கம் கனேடிய அரசால் அறக்கட்டளை (Charitable) அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வன்னி தமிழ் சங்கம் பல்லாண்டு காலமாக தாயகம் நோக்கிய மக்கள் பணியில் நேர்மையாவும், உறுதியாகவும் செயற்பட்டு வந்த சேவையின் பரிணாம வளர்ச்சியாக வன்னி சங்கம் கனேடிய தேசிய அரசால் அறக்கட்டளை அமைப்பாக (Charitable) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்வான செய்தியை ஊடகங்களினூடாக பொதுமக்களுக்கு அறிவிக்குமுகமாக ஒரு ஊடக சந்திப்பொன்றை இன்று (ஏப்ரல் 06, 2019) JC’s banquet Hall மண்டபத்தில் ஏற்ப்பாடு செய்திருந்தது.


வருங்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை ஊடகங்களுக்கும், எமது மக்களுக்கும் தெரியப்படுத்தியதுடன் ஒரு ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

வன்னி அறக்கட்டளையினரின் ஊடக அறிக்கை

கனேடிய மண்ணில் புலம்பெயர் தமிழர்களால் பல ஆண்டுகளாக ஈழமண்ணில் போரால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டில் வாழும் நம் இரத்த உறவுகளுக்கு வன்னிச்சங்கத்தினர் பல பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். எம் வன்னி மாநில உறவுகளை ஒன்றிணைக்க ஆரம்பிக்கப்பட்ட வன்னிச்சங்கத்தினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக வன்னி மாநில மாணவர்களின் கல்விக்கான புலமைப் பரிசில்களை வழங்குவதில் தொடங்கிய முதற்பணி. ஒரு சில மாணவர்களுக்கென தொடங்கிய பணி இன்று பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் பணி விரிவு பெற்றுள்ளது.

வன்னிச் சங்கத்தினர் மாணவருக்கான புலமைப்பரிசிலோடு நின்றுவிடாமல் வன்னி வாழ் மக்களின் நாளாந்த வாழ்வுக்கான உதவிகளோடு குடிநீர் மருத்துவம் போன்ற நாளாந்த அடிப்படைப் பணிகளையும் அவர்களுக்குச் செய்து வருகிறார்கள்.

மேலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்நுட்ப அறிவை ஊட்டும் முகமாக நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கினார்கள். அந்தவகையில் வன்னிச் சங்கத்தினர் முல்லைத்தீவு மாநிலத்திலுள்ள தண்ணீரூற்று மல்லாவியிலும் வவுனியா மாநிலத்தில் நெடுங்கேணியிலும் நான்கு தொழில்நுட்ப கணிணி நிறுவனங்களையும் நிறுவி இலவசக் கல்வியை வன்னிவாழ் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

வன்னி அமைப்பினரின் கடின உழைப்பும் விடாமுயற்சியின் புதிய வடிவமாக கனடா அரசின் அறக்கட்டளை என்ற உயரிய அமைப்பாக கனடா அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கனடா அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வன்னிச்சங்கம் அறக்கட்டளையாக இயங்குவதற்கான சில மாற்றங்களோடு கனடாச் சட்டஒழுங்கிற்கமைய தமது செயற்பாடுகளைக் கூர்மைப்படுத்துவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்கள்.

இதன் பயனாக கொடையாளருக்கான வரிகழிவோடு கூடிய நன்கொடை வழங்கும் வாய்ப்பு கொடையாளிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சிறப்பாகும்.

இதனால் ஈழமண்ணில் வன்னிவாழ் மக்களின் நாளாந்த வாழ்வியலுக்குத் தேவையான மேலதிக பணிகளை விரிவுபடுத்த முடியும்.

வன்னி மக்களின் உணவுத்தேவை கல்வித்தேவை தொழில்நுட்ப பயிற்சி ரோரண்டோ மாநகரத்திலும் அதைச் சுற்றியிலுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட முதியோருக்கான செயல்பாடுகள் கல்வி பண்பாட்டு செயல்பாடுகள் என வன்னிச்சங்கம் தமது பணிகளை விரிவுபடுத்தும்.

வன்னி அறக்கட்டளை கனடா நடுவண் அரசின் அறக்கட்டளை அமைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது.

200கனடாவெள்ளியை கொடையாக வழங்கும் பணக்கொடைவள்ளல்கள் 15 விழுக்காடு நடுவண் அரசின் வரிச்சலுகையையும் அதற்கு மேற்பட்ட பணக்கொடைக்கு 29விழுக்காடு வரிச்சலுகையும் மாநில அரசுகளின் அதிஉயர் வரிச்சலுகையாக 24விழுக்காடும் பெறமுடியும்.

கடந்த ஆண்டு மார்கழி முதல் தொடர்ந்து மேற்கொண்ட விரைவு உதவித் திட்டத்தால் 10 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான கற்றல் பொருட்கள் வழங்கப்பட்டது.

நீண்ட நெடும் மக்கள் பணியில் பணியாற்றிய வன்னிச்சங்கம் வன்னி அறக்கட்டளையாக உயர்வு பெற்றதினால் எமது தொண்டர்களும் பணக்கொடையாளர்களும் பெரும் மகிழ்ச்சியோடு தமது உள்ளப்பூரிப்பை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வன்னி அறக்கட்டளையினரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் நேர்மையோடும் நேரடியாகவும் எம்மக்களுக்கு உண்மையாக செயல்படுவோம் என்பதை இந்த ஊடக சந்திப்பின் ஊடக தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கிறோம்.

அதற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு தந்து கைகோர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

ஊடக அறிக்கை
வன்னி அறக்கட்டளை