கனடா எல்லையில் பனியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்பு!

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் எல்லையைக் கடந்து வந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பனிப் படர்ந்த பிரதேசத்தில் சிக்கியிருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.


எந்த தருணத்திலும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில் இருந்த குறித்த 25 வயது மதிக்கத்தக்க பெண், அவசர உதவி சேவைக்கு அழைத்துள்ளார்.

தகவலறிந்த தீயணைப்பு பிரிவினர் மனிடோபா பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

அண்மையில் அங்கு நிலவிய பனிப் பொழிவால் அந்த பகுதியே பனியால் மூடப்பட்டு, வெப்பநிலை 20 டிகிரிக்கும் கீழே சென்றிருந்து.

கடும் குளிரில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருந்த அந்த பெண்ணை மீட்ட தீயணைப்பு படையினர், நோயாளர் காவு வாகனம் வரும் வரை போர்வைகளால் மூடி வைத்திருந்தனர்.

அவர் மின்னசோட்டாவிலிருந்து ரயில் பாதை வழியாக நடந்தே, எல்லையைக் கடந்து கனடாவுக்குள் வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவருக்கு இன்னும் குழந்தை பிறக்காத நிலையில், கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்பதுடன் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்ததையடுத்து கைது செய்யப்பட்டு கனடா எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.