நியூசிலாந்து மசூதி தாக்குதல்: ரொரன்ரோவில் நினைவேந்தல்

நியூசிலாந்தில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரொரன்ரோ நதன் ஃபிலிப் சதுக்கப் பகுதியில் நேற்று மாலை நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நகர மண்டபத்திற்கு வெளியே, குறித்த அந்தச் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள ரொரன்ரோ சின்னத்தின் விளக்குகளின் ஒளி குறைக்கப்பட்ட நிலையில், அங்கு ஒன்றுகூடிய ரொரன்ரோ மக்கள் தமது இறுதி வணக்கத்தினைச் செலுத்தியதுடன், அங்கு குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் உரைகளும் இடம்பெற்றன.

குறித்த அந்த மசூதிகளில், அமைதிக்கான, தியானத்திற்கான, வழிபாட்டுக்கான இடத்தில், அப்பாவி மக்கள் மத நம்பிக்கையின் பெயரால் குறிவைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவ்வாறான கொடிய சம்பவம் கனடாவிலோ, உலகின் வேறெந்த நாட்டிலோ நடைபெறுவதை நாம் அனுமதிக்க முடியாது என்றும், அங்கு உரையாற்றிய கனேடிய அகதிகள் மற்றும் குடியுரிமைகள் விவகார அமைச்சர் அஹ்மட் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நியூசிலாந்தில் இடம்பெற்ற் இந்த கொடிய தாக்குதல் சம்பவம், ரொரன்ரோவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தை நடுநடுங்க வைத்துவிட்டது என்றும், முஸ்லிம் சமூகத்துடன் நாம் அனைவரும் துணை நிற்கின்றோம் என்பதனை வெளிக்காட்டவே நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளதாகவும், அவர்களுக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு என்பதனை வெளிக்காட்டுவதாகவும், ரொரன்ரோ நகரின் துணை நகரபிதா டான்சில் மினன் வோங் தெரிவித்துள்ளார்.