கடந்த ஒக்டோபரில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

டூர்ஹம் காவல்துறையினர் தற்போது சடலம் ஒன்றினை கண்டெடுத்துள்ள நிலையில், அது கடந்த ஒக்டோபர் மாதத்தில் காணாமல் காணாமல்போன மீனவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி பிற்பகல் வேளையில், தனித்து வெளியே சென்ற 31 வயது ஃபோங் வூ என்பவர், ஸ்கூகொங் தீவுக்கு அருகே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து குறித்த அந்த பிரதேசத்தில் படகுகள் மூலமும் உலங்குவானூர்தி மூலமும் தீவிர தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், குறித்த அந்த நபர் குறித்த எந்தவொரு தடயமும் அந்த வேளையில் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் நேற்று ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள காவல்துறையினர், நேற்று முன்தினம் மீனவர் ஒருவர் ஊடாக மனிதச் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அது ஒக்டோபரில் காணாமல்போன ஃபோங் வூ உடையதாக இருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த தீவுப் பகுதியில், குறித்த அந்த நபர் காணாமல் போன ஆற்றில் வியாழக்கிழமை மாலை ஆறு மணியளவில் குறித்த சடலத்தை கண்ட மீனவர் ஒருவர் 911 தொலைபேசி ஊடாக காவல்துறையினரை தொடர்புகொண்டு விபரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறித்த சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சலடத்தின் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும், மரணத்திற்கான காரணத்தினை கண்டறியும் நோக்குடனும் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.