ஒஷாவாவில் மர்மமான முறையில் சடலம் மீட்பு: கொலை என சந்தேகம்

ஒஷாவாவின் வடபகுதி கிராமம் ஒன்றின் வீதி ஓரத்தில் இந்த வார ஆரம்பத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குறித்த அந்தச் சம்பவத்தினை கொலை என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்தப் பகுதியில் உள்ள ஸ்டீவன்சன் வீதியில், கடந்த புதன்கிழமை காலை 8.15 அளவில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பணியாளர் ஒருவர், வீதியின் மேற்கு கரையில் குறித்த அந்த சடலம் அனாதரவாக கிடப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர், சடலத்தில் பலத்த அடி காயங்கள் காணப்பட்டதனை அவதானித்து்ளளனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த அந்த சடலத்துக்கு உரியவர் ஒன்ராறியோ, கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 43 வயது ஜேசன் ஜோன் பிரவுன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் நேற்று தகவல் வெளியிட்டனர்.

குறித்த அந்தச் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளும் நேற்று நிறைவு பெற்றுள்ள நிலையில், குறித்த அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அந்த நபர் காணாமல் போனதாக ஏற்கனவே செவ்வாய்க்கிழமை மாலை 6.30 அளவில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண காவல்துறையினருடன் இணைந்து டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் மற்றும் வோட்டலூ பிராந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.